தூத்துக்குடியில் கட்டிட காண்டிராக்டர் கார் கடத்தல்


தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கட்டிட காண்டிராக்டர் காரை கடத்திய வாலிபர் சிக்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கட்டிட காண்டிராக்டர் காரை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

கார் கடத்தல்

தூத்துக்குடி தெர்மல்நகர் கோயில்பிள்ளை நகரை சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவருடைய மகன் ரவிச்சந்திரன் (வயது 55). கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு பாலவிநாயகர் கோவில் தெருவில் காரில் சென்று கொண்டு இருந்தார். அந்த தெருவில் உள்ள ஒரு புத்தக கடை முன்பு காரை நிறுத்தி விட்டு, அதனை என்ஜினை ஆன் செய்த நிலையிலேயே வைத்துவிட்டு புத்தகக் கடையில் பொருள் வாங்கி கொண்டு இருந்தாராம்.

அப்போது அந்த வழியாக குடிபோதையில் 3 பேர் வந்து உள்ளனர். அவர்கள் திடீரென காருக்குள் ஏறி காரை எடுத்து சென்றுவிட்டனர். இதனை பார்த்த ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர். போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

கைது

இந்த நிலையில் முத்தையாபுரத்தை கடந்து கார் செல்வதை அறிந்த மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள், தனிப்பிரிவு ஏட்டு சுப்பிரமணியன், முனீசுவரன், சக்திவேல் மற்றும் போலீசார் தொடர்ந்து விரட்டி சென்றனர். பொட்டல்காடு விலக்கை தாண்டி தனியார் கல்லூரி அருகே சென்ற போது போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேர் தப்பி சென்று விட்டனர். காரை ஓட்டி சென்ற எம்.சவேரியார்புரத்தை சேர்ந்த மங்களபாண்டி மகன் தங்கதுரை (31) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story