மலைக்கிராம மக்கள் மறியல்
கொடைக்கானலில் மதுபான விற்பனையை தடுக்கக்கோரி மலைக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட மலைக்கிராமமான கவுஞ்சியில், அனுமதியின்றி சிலர் மதுபானம் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி, அந்த கிராம மக்கள் மேல்மலைக்கு செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இதுதொடர்பாக விசாரணை நடத்தி மதுபானம் விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள் அவதிப்பட்டனர். இதற்கிடையே அப்பகுதியில் அடிக்கடி மறியல் நடப்பதாகவும், அதனை தடுக்கும் வகையில் மன்னவனூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.