இந்து முன்னணி நிர்வாகி மயங்கி விழுந்து சாவு
ஸ்ரீவைகுண்டம் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி நிர்வாகி மயங்கி விழுந்து இறந்து போனார்.
ஸ்ரீவைகுண்டம்:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரான் சுவாமி கோவில் முன்பிருந்து தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலமானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று பாரத ஸ்டேட் வங்கி முன்பு நிறைவடைந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் வெட்டும்பெருமாள் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வெட்டும்பெருமாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தினர்.