தூத்துக்குடியில் ஆஷ் நினைவு மண்டபத்தை சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம்


தூத்துக்குடியில் ஆஷ் நினைவு மண்டபத்தை சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

ஆஷ் நினைவு மண்டபம்

தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆஷ் நினைவு மண்டபத்தை சீரமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்று மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்தனர்.

அதன்படி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் திரண்டனர். அங்கு வ.உ.சி. உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் ஊர்வலமாக செல்ல தயாரானார்கள். போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா, மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேலன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட செயலாளர் ராகவேந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனு கொடுக்கும் போராட்டம்

அவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்ட போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பாத யாத்திரையாக செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். வாகனத்தில் சென்று மனு அளிக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து போலீசார் ஒரு வேன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இந்து முன்னணி நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், இந்திய விடுதலைக்காக போராடிய வ.உ.சி, வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்களை கொடுமைப்படுத்திய ஆங்கிலேய அதிகாரி ஆஷ். அவரது நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்க கூடாது. ஆஷ் நினைவு மண்டபத்தில் நடைபெறும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story