இயக்குனர் லீலா மணிமேகலை மீது இந்து முன்னணியினர் போலீசில் புகார்
இந்து கடவுளை இழிவுபடுத்தியதாக இயக்குனர் லீலா மணிமேகலை மீது இந்து முன்னணியினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
பெண் இயக்குனர் லீலா மணிமேகலை என்பவர் இந்து கடவுள்களை இழிவு படுத்தும் விதத்தில் காளி தெய்வம் சிகரெட் பிடிப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர் கொடியை கையில் பிடித்து இருப்பது போன்று இழிவாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லீலா மணிமேகலை படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பி.பிரபாகரன், குடியாத்தம் நகர தலைவர் வி.கார்த்தி, ஒன்றிய தலைவர் கே.ரவி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் புகழேந்தி உள்பட ஏராளமானோர் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லட்சுமியிடம் புகார் மனு அளித்தனர்.
அப்போது பெண் இயக்குனர் லீலா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்து முன்னணியினர், லீலா மணிமேகலை படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து வந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.