கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் மானூர் அருகே உள்ள நடுப்பிள்ளையார்குளம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். அதில், மானூர் அருகே உள்ள நடுப்பிள்ளையார்குளத்தில் சட்ட விரோதமாக பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீட்டில் இயங்கி வரும் கிறிஸ்தவ சபைக்கு சீல் வைத்து அங்கு கிறிஸ்தவ சபை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது. அந்த ஊரில் சிலர் மதம் மாறிய பின்னரும் தங்களுடைய சாதி சான்றிதழ்களில் இந்துக்கள் என்று பெயர் வைத்துள்ளனர். அவர்களுடைய சாதி சான்றிதழ்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், நடுப்பிள்ளையார்குளத்தில் மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். அங்கு இந்துக்கள் கோவில் அருகே உள்ள இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட நிரந்தர தடை விதிக்க வேண்டும். அங்கு மதம் மாற்றம் செய்பவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.