சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம்


சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம்
x

செங்கத்தில் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கத்தில் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திரவுபதி அம்மன் கோவில்

செங்கம் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட மில்லத்நகர் - போளூர் சாலையில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 800 வருடம் பழமையானதாகும்.

செங்கம் பகுதியில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் இந்த கோவிலில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் குலதெய்வமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் ஆடி மாதம் மற்றும் விசேஷ நாட்களில் வந்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

பூமி பூஜை

இந்த நிலையில் பா.ஜ.க., இந்து முன்னணி முன்னிலையில் கோவில் வழிபாட்டுதாரர்கள், முக்கியஸ்தர்கள் சார்பில் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை மீட்டு, சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

நேற்று கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை நடைபெற போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து வருவாய்த்துறை, இந்து அறநிலைய துறை அதிகாரிகள் அங்கு வந்து கோவிலுக்கு சொந்தமான இடம் நீர்பிடிப்பு பகுதியாகும். அதில் கட்டுமான பணிகள் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.

வாக்குவாதம்

இதனால் இந்து அமைப்பினருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடத்தை மீட்டு சுற்றுச்சுவர் அமைக்க கோரி பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண், கோவில் வழிபாட்டுதாரர்கள், பொதுமக்கள், ஊர்வலமாக தாலுகா அலுவலகம் வரை சென்று மனு அளிக்கப் போவதாக அறிவித்தனர்.

ஆனால் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை என அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து இந்து அமைப்புகள், பா.ஜ.க.வினர் மற்றும் முக்கியஸ்தர்கள் சார்பில் கலெக்டரை நேரில் சந்தித்து இதுகுறித்து மனு அளிப்பதற்காக நிர்வாகிகள் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story