கோவில் கதவை அடைத்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் கதவை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலமான கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சாமி கோவில் உள்ளது. நேற்று மாலை சூரிய கிரகணத்தையொட்டி பல கோவில்களின் நடை அடைக்கப்பட்டது. ஆனால், நாகநாதர் கோவில் நடை அடைக்கப்படாமல் திறந்து இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த கோவிலின் நுழைவு வாயில் கதவை அடைத்து தரையில் அமர்ந்து இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவில் நிர்வாகத்தினர் ஆகம விதிகளை மீறி செயல்படுவதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்கள் பலர் உள்ளே இருந்த நிலையில் திடீரென வாயில் கதவு அடைக்கப்பட்டதால் பரபரப்பான ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் கதவை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரி, இந்து இளைஞர் காவிப்படை தலைவர் பிரபு உள்பட 13 பேரை கைது செய்தனர். பின்னர் கோவில் கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.