இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு: தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு


இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு: தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
x

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

செயல் அலுவலர் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான குரூப்-7 பி தேர்வு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கான குரூப்-8 தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கரூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 மையங்களில், இத்தேர்வுகளை எழுத 2,549 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான குரூப்-7 பி தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்விற்கு 1,138 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலையில் நடைபெற்ற தேர்வில் 567 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 571 பேர் தேர்வு எழுத வரவில்லை. மதியம் நடைபெற்ற தேர்வில் 556 பேர் தேர்வு எழுதினர். 582 பேர் தேர்வு எழுதவில்லை.

கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் நேரில் பார்வை யிட்டனர்.

வீடியோ பதிவு

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம் 10 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 4 நடமாடும் குழுக்களும், அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வீடியோ பதிவு செய்யப்பட்டன. தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுதுபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், கழிப்பிட வசதிகள், மின்வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி செய்யப்பட்டிருந்தன.

சாலை மறியல்

இந்நிலையில் கரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற தேர்வினை எழுதவந்த தேர்வர்கள் 10 பேர் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனையடுத்து அவர்கள் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவித்தனர். இதனால் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் அழுதனர். இந்நிலையில் தாமதமாக வந்தவர்கள் கரூர்-ஐந்துரோடு சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அரசு தேர்வுகளுக்கு வரும்போது 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கான குரூப்-8 தேர்வுகள் நடைபெற உள்ளன. கரூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 10 மையங்களில் 1,411 பேர் எழுத உள்ளனர்.


Next Story