இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்
இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை,
இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
துறவியர் மாநாடு
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் சார்பில் மாநிலம் தழுவிய துறவியர் மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. துறவியர் மாநாட்டில் இந்து சமயத்தை வளர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் 2 நாட்கள் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மதமாற்றத்தடை சட்டம்
நாடு விடுதலையடைந்தபோது இந்தியாவில் 93 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது இந்துக்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு மதமாற்றம்தான் காரணம். எனவே இந்தியாவில் 7 மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது போல தமிழகத்திலும் மதமாற்றத்தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.
நதி யாத்திரை
தமிழகத்தில் சமயக்கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் சமயக்கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள நதிகள் நீர்நிலைகளை மீட்டு நதி யாத்திரை நடத்த வேண்டும். இந்து மயானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பசுக்களை இறைச்சிக்காக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். நிதி ஆதாரமுள்ள கோவில்களில் கோசாலைகள் அமைத்து பசுக்களை பாதுகாக்க வேண்டும். கோவில் இடங்களை மீட்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே, அகில உலக இணைப்பொதுச் செயலாளர் ஸ்ரீகோ.ஸ்தாணு மாலயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொதுக்கூட்டம்
இதனைத் தொடர்ந்து மாலையில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக் கூட்டம் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை தாங்கி தீர்மானங்களை வாசித்தார்.
விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே பேசுகையில், இந்துக்கள் அனைவரும் இந்து மதத்தை காக்க ஒன்றுசேர வேண்டும் அதுமட்டுமின்றி இந்துக்களை காப்போம் என சபதம் ஏற்க வேண்டும் என்றார்.
அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்ரீகோ. ஸ்தாணு மாலயன் பேசுகையில், மக்கள் விழித்தெழ வேண்டும். இந்துக்களை தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசுகையில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.