ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திடீர் சோதனை
ஈரோடு மாவட்டத்தில் மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகும் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையிலான போலீசார் நேற்று அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
3 பேர் கைது
இந்த சோதனையின்போது அங்கு மூட்டை, மூட்டையாக மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டாஸ்மாக் கடை உரிமையாளரே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை உரிமையாளர் கணேசன் (வயது 55), பார் ஊழியர் அன்பு (31), குடோன் உரிமையாளர் மகேந்திரன் (53) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.