மாவட்ட ஆக்கி, கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி: பாலக்கோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு போட்டிகள் நடந்தன. இதில் பாலக்கோடு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஆக்கி போட்டியில் இந்த பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதேபோல் ரிஷிகேஷ் என்ற மாணவர் உயரம் தாண்டும் போட்டியில் முதல் இடமும், கோகுலநாத் என்ற மாணவர் 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2-வது இடமும் பெற்று, மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மேலும் சூப்பர் சீனியர் கூடைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்று மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், அறிவழகன் மற்றும் இளையராஜா ஆகியோரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டி, வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உதவி தலைமை ஆசிரியர்கள் சுதா, பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.