ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக நீடிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக நீடிக்கிறது.
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக நீடிக்கிறது.
கனமழை
கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தொட்டபெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேநிலையில் நீடிப்பு
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதேநிலையில் நீடித்தது. இருப்பினும் சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள், நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்டவைகள் தண்ணீரில் மூழ்கின.
குறிப்பாக ஐந்தருவிகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசித்த மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பரிசலுக்கு தொடரும் தடை
மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, நாகர்கோவில், முதலைப்பண்ணை மற்றும் அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து ரோந்து ெசன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.