காணும் பொங்கலையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சி
பென்னாகரம்:
காணும் பொங்கல் பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காணும் பொங்கல்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14-ந் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. தொடர்ந்து 15-ந் தேதி சூரியன் பொங்கலும், 16-ந் தேதி மாட்டுப்பொங்கலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர்.
காணும் பொங்கல் அன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி நேற்று ஒகேனக்கல்லில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர்.
பரிசல் சவாரி
மேலும் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது. ஓட்டல்கள், மீன் வறுவல் கடைகள், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
போக்குவரத்து நெரிசல்
கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்ததால், பஸ் நிலையம், அஞ்செட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் திட்டு, ஆலம்பாடி, மெயின் அருவி, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.