வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சி


வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தை தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்துவருகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்தனர். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பாறைகளுக்கிடையே பரிசல்களில் உற்சாகமாக சென்று மகிழ்ந்தனர்.

தொடர்ந்து சிறுவர் பூங்கா, முதலைப்பண்ணை ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள கடைகள், ஓட்டல்கள், மீன் சில்லி கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதையொட்டி போலீசார் தீவிரகண்காணிப்பு பணியில்ஈடுபட்டனர்.


Next Story