கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றம்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை 8.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சிலர், கோவில் கோபுரத்தின் மீது ஏறி அனுமதியின்றி கோபுரத்தில் தேசிய கொடியை ஏற்றினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் கொடியை ஏற்றியவர்கள், அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே கோவில் நிர்வாகிகளும் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தாலும், அதனை அகற்றாமல் சென்றனர். இருப்பினும் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.