தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-கலெக்டர் சாந்தி உத்தரவு
தர்மபுரி:
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
மாண்டஸ் புயல்
வங்க கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்தது. இது மாண்டஸ் புயலாக உருவெடுத்தது.
இந்த மாண்டஸ் புயல் இன்று (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இன்று விடுமுறை
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நாள் முழுவதும் குளிர் காற்று வீசியது.
இந்தநிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.