யானை மீது புனித நீர் ஊர்வலம்
தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 3-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 3-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
சுப்பிரமணியசாமி கோவில்
தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து முதல்கால யாகாசாலை பூஜை நேற்று இரவு தொடங்கியது. இன்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை (சனிக்கிழமை) மாலை 8.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழா
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும 10.15 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு மகா அபிசேஷகமும். தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள், சிவகணங்கள் கோலாட்டம் முழங்க, பேண்டு வாத்தியங்கள் இசைக்க முளைப்பாரி கோவிலுக்கு எடுத்து வந்தனர். கடுமையான வெயில் சுட்டெரித்ததால் சாலை முழுவதும் வண்ண ரோஜா மலர்கள் தூவி பொதுமக்கள் வரவேற்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.