வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா-தர்மபுரி விழாவில் கலெக்டர் சாந்தி பேச்சு
தர்மபுரி:
வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் கட்டமாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தர்மபுரியில் நடந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலெக்டர் சாந்தி பேசினார்.
மாதாந்திர உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா தர்மபுரி வள்ளல் அதியமான் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அரசு டவுன் பஸ்களில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயணத்திட்டம், மனவளர்ச்சி குன்றிய மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.2000-மாக உயர்த்தி வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.
இலவச பட்டா
இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதி உதவி தொகையை ரொக்கமாக வழங்கி தாலி செய்ய 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது தவிர ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் சென்றடைய சிறப்பு மருத்துவ முகாம் 10 வட்டாரங்களில் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் கட்டமாக இலவச பட்டா வழங்க தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசால் வழங்கப்படும் திட்டங்களை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், 27 பேருக்கு கறவை மாடு வளர்ப்பு மற்றும் துணி வியாபாரம் செய்ய வங்கி கடன் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் என மொத்தம் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் உதவி கலெக்டர் ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தாசில்தார் ஆறுமுகம், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி தலைவர் மாரியம்மாள் மற்றும் சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.