தர்மபுரி நகராட்சியில் 60 பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்ட ஆணை-கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தர்மபுரி நகராட்சியில் 60 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
புதிய வீடுகள் கட்ட ஆணை
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளையும், குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரைய பத்திரங்களையும் அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் மானியத்துடன் கூடிய புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.10 லட்சம் மானியம் வீதம் ரூ.1.26 கோடி மானிய நிதி உதவியுடன் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.
வீடுகள் ஒதுக்கீட்டு ஆணை
இதேபோன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தர்மபுரி மாவட்டம் கோழிமேக்கனூரில் ரூ.14 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 168 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது கட்டமாக 28 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளையும் கலெக்டர் சாந்தி வழங்கினார். ஏற்கனவே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 140 பயனாளிகளுக்கு கடந்த ஜூன் மாதம் வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாவேந்தன், இளநிலை பொறியாளர் சிலம்பரசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.