மாரண்டஅள்ளியில் பராமரிப்பற்ற தூய்மை பணியாளர் குடியிருப்புகள்-சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மாரண்டஅள்ளியில் பராமரிப்பற்ற தூய்மை பணியாளர் குடியிருப்புகள்-சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 4:45 PM GMT)
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளியில் பழுதடைந்து பராமரிப்பின்றி உள்ள தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகளை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

பழுதடைந்த வீடுகள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர பகுதிகளில் ஒன்றாக மாரண்டஅள்ளி பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. கல்வி, வணிகம், விவசாயம் தொடர்பான பல்வேறு பணிகளுக்காக தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரண்டஅள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாரண்டஅள்ளி டவுன் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 15 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது.

ஓடு வீடுகளான இவற்றில் பழுதடைந்த 8 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இந்தநிலையில் 7 வீடுகளில் துப்புரவு தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மற்றவர்கள் வெளியிடங்களில் வசிக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் உள்ள 7 வீடுகளும் பழுதடைய தொடங்கி உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த குடியிருப்பு பகுதியின் அருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு துப்புரவு தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அடுக்குமாடி குடியிருப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்க நிர்வாகி செல்வம்:-

மாரண்டஅள்ளி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளில் 8 வீடுகள் ஏற்கனவே இடிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 7 வீடுகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக போதிய அடிப்படை வசதிகள் இன்றி தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகளும் முழுமையாக பழுதடைந்து விட்டன. இவர்களுடைய ஊதியத்தில் வாடகை பிடிக்கப்படுகிறது. எனவே இந்த வீடுகளையும் இடித்து விட்டு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பை இதே பகுதியில் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்கள் சுகாதாரமான சுற்றுச்சூழலில் கவுரவமாக வசிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

புதிய குடியிருப்புகள்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ராமநாதன்:-

மாரண்டஅள்ளியில் துப்புரவு பணியாளர்கள் ஊரையே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் குடும்பங்களுடன் வசிக்க கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், பல ஆண்டுகளுக்கு முன்பே பழுதடைந்து விட்டன. எனவே தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகளை கட்டி தர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுப்புற சுகாதாரம்

ஆசிரியர் கணேசன்:-

பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள் காலை முதல் மாலை வரை தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை பணி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் குடும்பத்துடன் வசிக்கும் வீடுகள் பராமரிப்பின்றி மழைக்காலத்தில் ஒழுகும் நிலையில் உள்ளன. அங்கு வீடுகள் கிடைக்காதவர்கள் வெளியிடங்களில் வசிக்கிறார்கள். எனவே தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சுற்றுப்புற சுகாதாரம் கொண்ட குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

சிறப்பான தூய்மை பணி

சமூக ஆர்வலர் செந்தில்குமார்:-

துப்புரவு தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் நோய்கள் பரவும் அபாயம் இருந்த நேரத்தில் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தூய்மை பணியை சிறப்பாக மேற்கொண்டார்கள். அவர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகள் ஏற்கனவே பழுதடைந்துள்ளன. பல வீடுகள் ஏற்கனவே இடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பகுதியில் பணி புரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களும் பயன் பெறும்வகையில் புதிய குடியிருப்புகளை கட்டி தரவேண்டும்.

அடிப்படை வசதிகள்

மாரண்டஅள்ளியை சேர்ந்த ஜனார்த்தனன்:-

மாரண்டஅள்ளி நகர பகுதியில் துப்புரவு பணியாளர்கள் காலம் நேரம் பார்க்காமல் தூய்மை பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் குடும்பங்களுடன் வசிக்கும் பகுதி, சுகாதாரத்துடன் தேவையான குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இருப்பது அவசியம். எனவே அவர்களுக்கான குடியிருப்பை மேம்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story