மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ரூ.6.20 லட்சத்தில் புதிய வீடு கலெக்டர் திறந்து வைத்தார்


மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ரூ.6.20 லட்சத்தில் புதிய வீடு கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:45 AM IST (Updated: 11 Feb 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட நிர்வாகம், மதர்தெரசா அறக்கட்டளை பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ரூ.6.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வீட்டை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்

மாவட்ட நிர்வாகம், மதர்தெரசா அறக்கட்டளை பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு ரூ.6.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வீட்டை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

மாற்றுத்திறனாளி தம்பதி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருவிசநல்லூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மனைவி கவுரி. மாற்றுத்திறனாளி தம்பதிகளான இவர்களால் தரையில் தவழ்ந்துதான் செல்ல முடியும். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் அனுஷ்கா என்ற மகள் உள்ளாள். இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த தம்பதியினருக்கு சொந்த இடமோ, குடியிருக்க வீடோ இல்லை. திருவிசநல்லூர் அய்யனார் கோவில் இடத்தில் குளத்துகரை ஓரமாக சேதம் அடைந்த ஒரு சிறிய ஓலைக்குடிசையில் வசித்து வந்தனர்.

சொந்தக்காலில் நிற்க விருப்பம்

உடலில் ஊனத்தை கொடுத்த இறைவன் இவர்களின் உள்ளத்தில் ஊனத்தை கொடுக்கவில்லை. தங்களது நிலையை வைத்து இவர்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்கவில்லை. யாரிடமும் யாசகம் பெற்று வாழ விரும்பவில்லை. சொந்தக்காலில் நிற்க, சொந்தமாக உழைத்து வாழவே விரும்பினார்கள்.

இருவரும் கடின உழைப்பாளிகள். தங்களுக்கு பல்வேறு குறைகள் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

கஷ்ட ஜீவனம்

கவுரி, தென்னை ஓலையை விலைக்கு வாங்கி வந்து மற்றவர்களின் உதவியுடன் குளத்தில் அதை ஊற வைத்து, அந்த தென்னை ஓலையை கொண்டு கீற்று முடைந்து விற்று வருகிறார். அரிசி மாவும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

அண்ணாதுரையோ, இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இருவருடைய கஷ்ட ஜீவனத்தில்தான் இந்த குடும்பமே வாழ்ந்து வருகிறது.

சொந்த வீடு இல்லை

இவர்கள் தங்களுக்கு குடியிருக்க சொந்த வீடு வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இந்த தம்பதியினரின் நிலைமையும், இவர்களது கடின உழைப்பு குறித்தும், குடியிருக்க இடமில்லாதது குறித்தும் அறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நேரடியாக கவுரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, தாங்கள் குடியிருக்க சொந்த வீடு வேண்டும் என கவுரி கூறினார். அதைகேட்ட கலெக்டர், உங்களுக்கு கண்டிப்பாக அரசு ஒதுக்கீட்டில் இடம் கொடுத்து வீடு கட்டி தருகிறோம். கவலைப்படாதீர்கள் என நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் அவர் விட்டுவிடவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் உடனடியாக அடுத்தடுத்த பணிகளை மேற்கொண்டார்.

இலவச வீட்டு மனைப்பட்டா- வீடு கட்ட ஆணை

இதையடுத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களது சொந்த ஊரிலேயே 1,100 சதுர அடி கொண்ட இலவச வீட்டுமனைப்பட்டாவையும், முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையையும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று வழங்கினார்.

மேலும் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால் அவர்களால் முன்னின்று வீடு கட்டுவதற்கு முடியாது என்பதை அறிந்து மதர்தெரசா அறக்கட்டளை உதவியுடன் வீடு கட்டி கொடுக்க கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

புதிய வீடு

அதன்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமும், மதர்தெரசா அறக்கட்டளை சார்பில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரமும் என மொத்தம் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தம்பதியினர் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட வீடு மாற்றுத்திறனாளி தம்பதியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

கலெக்டர் திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சிக்கு மதர்தெரசா அறக்கட்டளை தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய வீட்டை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றியதுடன் வீட்டிற்கான சாவியை அண்ணாதுரை -கவுரி தம்பதியிடம் வழங்கினார்.

அப்ேபாது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் மாவட்ட கலெக்டருக்கும், மதர்தெரசா அறக்கட்டளை தலைவருக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சம்பத்ராகவன், கோவிந்தராஜ், முரளிகிருஷ்ணன், கும்பகோணம் ஆர்.டி.ஓ. பூர்ணிமா, தாசில்தார் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வீரமணி, வட்டார பொறியாளர் ராஜேந்திரன், பணி பார்வையாளர் சபாமதி ராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் மங்கையர்கரசி, ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், துணைத் தலைவர் சாமிநாதன், செயலாளர் ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மதர்தெரசா அறக்கட்டளை தகவல்துறை அலுவலர் ஜார்ஜ், திட்ட இயக்குனர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரேணுகா, சர்மிளா, வர்ஷினி, கிறிஸ்டி ஆகியோர் செய்து இருந்தனர்.

கலெக்டர் பாராட்டு

தஞ்சை மாவட்ட நிர்வாகத்துடன் மதர்தெரசா அறக்கட்டளை இணைந்து முதல்-அமைச்சரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை 4 வீடுகள் கட்டி கொடுத்துள்ளது.

இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மதர் தெரசா அறக்கட்டளை இதுவரை 4 வீடுகள் கட்டி கொடுத்துள்ளது. அதற்காக அந்த அறக்கட்டளை நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சை மாவட்ட நிர்வாகம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த வீட்டுடன் சேர்த்து இதுவரை 11 வீடுகள் கட்டி கொடுத்துள்ளது. ஏழை, எளியோருக்கு, விளிம்பு நிலை மக்களுக்கு சேவை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். மாற்றுத்திறனாளி தம்பதியினரான அண்ணாதுரையும், கவுரியும் கடும் உழைப்பாளிகள். உழைக்கும் மக்களை கைதூக்கிவிட்டால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்பதற்கான ஒத்துழைப்பு தான் இந்த வீடு என்றார்.


Next Story