பணியில் இல்லாத குழந்தைகள் பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் மீது நடவடிக்கை


பணியில் இல்லாத குழந்தைகள் பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் மீது  நடவடிக்கை
x

ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் முதல்-அமைச்சர் சோதனையின் போது, பணியில் இல்லாத அலுவலர்கள் மீது விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் முதல்-அமைச்சர் சோதனையின் போது, பணியில் இல்லாத அலுவலர்கள் மீது விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

திடீர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிற்கு நேற்று வந்திருந்த தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் திடீரென இப்பள்ளியை ஆய்வு செய்தார்.

அப்போது பணியில் இல்லாதிருந்த கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் இப்பள்ளியை நேரில் ஆய்வு செய்து மாணவர்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது அலுவலகத்தில் அலுவலர்களின் வருகை பதிவேடுகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்.

நேற்று முன்தினம் முதலமைச்சர் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத். கண்காணிப்பாளர் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விசாரணை நடத்தினார். அலுவலர்கள் அனைவரும் முறையாக பணியாற்றிட. வேண்டும்.

மாணவர்களை உங்கள் குழந்தைகள் போல் நடத்திட வேண்டும். எவ்வித புகார்களும் எழாதவாறு பணியாற்றிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின்னர் குழந்தைகள் இல்லத்தில், குழந்தைகளுக்கு நாள்தோறும் வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து, தினசரி உணவுகள் பட்டியலை கேட்டறிந்து, மாணவர்களின் விருப்பப்படி உணவுகளை வழங்கலாம் என தெரிவித்தார். மாணவர்களை சந்தித்து குறைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டறிந்தார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது இந்த சிறுவர்களுக்கான அரசு பாதுகாப்பு இல்லத்தை திடீர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளியில் குழந்தைகளுக்கு வசதிகளை மேம்படுத்திடவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பள்ளியை இப்போது ஆய்வு செய்தோம்.

பணியில் இல்லாதது குறித்து அலுவர்களிடம் கேட்டதற்கு, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதன் காரணமாக காலதாமதமாக வந்ததாக தெரிவித்தார்கள்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் இல்ல கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 17 பி குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.

இப்பள்ளியில் 46 மாணவர்கள் உள்ளனர். 44 ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பணியில் உள்ளனர். முதல்-மைச்சர் ஆய்வின் போது ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் குறைவாகவே வருகை தந்துள்ளனர். இது மிகவும் தவறானது.

அவர்களுக்கு இதுபோன்ற மேலும் நடைபெறாமல் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சமூக பாதுகாப்பு இணை இயக்குனர் ராஜ சரவணகுமார், துணை இயக்குனர் ரத்தினம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கண்ணன் ராதா, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story