வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதல்
உடன்குடி அருகே வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி அருகேயுள்ள புதுமனைகோட்டைவிளையைச் சேர்ந்தவர் முத்து (வயது 65). கட்டிடத்தொழிலாளி. இவர், கடந்த 21-ந்தேதி குடும்பத்தினருடன் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வேனில் சென்று விட்டு ஊருக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். ஊருக்குள் வந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த சங்கிலிபெருமாள் மகன்கள் பாலாஜி (25), தமிழ் (31) ஆகிய இருவரும் வேனை மறித்து பிரச்சினை செய்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து வந்து அந்த 2 பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் முத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகனையும், மருமகளையும் அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற முத்துவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த முத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்கு பதிவு செய்து பாலாஜி, தமிழ் ஆகிய 2பேரையும் தேடிவருகிறார்