பள்ளி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிகேட்டதால் வீடுபுகுந்து தாக்குதல்
ஒடுகத்தூர் அருகே மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்ேகட்டதில் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து தாக்கினர். இதில் சிறை காவலர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். கேலி, கிண்டல்
கேலி, கிண்டல்
ஒடுகத்தூர் சந்தை மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் திருமால். வேலூர் மத்திய சிறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ரமா என்ற மனைவியும் மகளும் உள்ளனர். இவரது மகள் ஒடுகத்தூரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார்.
ஒடுகத்தூர் அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சந்தை மேட்டுப் பகுதியில் இனிப்பு கடை நடத்தி வருகிறார். இவருக்கு சந்தோஷ் (வயது 22), திரு ஆகிய மகன்கள் உள்ளனர். இனிப்பு கடையில் தந்தைக்கு இருவரும் உதவியாக இருந்து வந்தனர். சந்தைமேடு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவரை சந்தோஷ் தினமும் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி, தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
வீடுபுகுந்து தாக்குதல்
அதன்பேரில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இனிப்பு கடைக்கு சென்று சந்தோஷை கண்டித்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் சந்தை மேட்டில் உள்ள மாணவியின்வீட்டுக்கு சென்று தாக்கி உள்ளனர்.
இதில் வேலூர் மத்திய சிறையில் தலைமை காவலராக பணிபுரியும் திருமால், அவரது அண்ணன் மகன்கள் மதன்குமார், தியாகராஜன் மற்றும் குழந்தைகள், பெண்கள் என 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த திருமால், தியாகராஜன், மதன்குமார் ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருமாலின் மனைவி ரமா வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல் திருமால் தன்னை தாக்கியதாக, ராமச்சந்திரன் புகார் கொடுத்துள்ளார்.
இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.