பாலியல் புகார் கூறியதால் வீடு புகுந்து தாக்குதல்: 14 பேர் கும்பலை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்


பாலியல் புகார் கூறியதால் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் பெற்றோரை தாக்கிய 14 பேர் கொண்ட கும்பலை கைது செய்யக்கோரி வடகாடு போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

வீடு புகுந்து தாக்குதல்

ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். கூலிதொழிலாளியான இவர் 19 வயதுடைய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பியவர்களை எதிர்தரப்பினர் வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காத்திருப்பு போராட்டம்

இந்தநிலையில், சாதிப்பெயரை சொல்லி கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட சுப்பிரமணியன், பிரபாகரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பலை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வடகாடு போலீஸ் நிலையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்ட குழுவினர் போலீஸ் நிலையம் அருகே மதிய உணவிற்காக சமையல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தங்களுக்கு உரிய முறையில் நியாயம் கிடைக்காத பட்சத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Next Story