பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரசு வழங்கிய வீட்டு மனைகளை மீட்டு தர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
தர்மபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரசு வழங்கிய வீட்டுமனைகளை மீட்டு தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த 96 குடும்பங்களுக்கு கடந்த 1992-ம் ஆண்டு தமிழக அரசு மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் தலா 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது. ஆனால் தற்போது வரை எங்களுக்கு தமிழக அரசு வழங்கிய வீட்டுமனையை அதிகாரிகள் அளந்து காட்டவில்லை. அதனால் அந்த இடத்தில் எங்களால் வீடு கட்டி வசிக்க முடியாமல் கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் கஷ்டபட்டு வருகிறோம்.
இது தொடர்பாக நாங்கள் பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சிலர் அரசு அதிகாரிகள் துணையுடன் எங்களது வீட்டு மனைகளை வேறு நபர்களிடம் பணத்தை பெற்று கொண்டு முறைகேடாக பட்டா பெற ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
மீட்டு தர வேண்டும்
எனவே பிற்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை முறைகேடாக விற்பனை செய்ய முயலும் அவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு எங்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாக்களை மீட்டு கொடுத்து அதற்கான உரிய இடத்தை அளந்து கொடுத்தால் நாங்கள் வீடு கட்டிக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.