வீட்டுக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் -குடிசை மாற்று வாரிய பொதுமக்கள் கோரிக்கை

எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிசை மாற்று வாரிய வீட்டுக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிசை மாற்று வாரிய வீட்டுக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
குடிசை மாற்று வாரிய வீடுகள்
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதில் குடியிருக்கும் பொதுமக்கள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1977 காலகட்டத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அன்னை சத்யா நகர் என்ற பெயரில் ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் அருகே அல்லிக்கண்மாய் சுடுகாடு பகுதியில் வீடுகள் கட்டி கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வந்தோம். இந்நிலையில் நகர் விரிவாக்கம் என்ற பெயரில் எங்கள் வீடுகளை கோர்ட்டு உத்தரவின்படி இடித்தனர். எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் 20 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மாதந்தோறும் பணம் கட்டி 144 குடும்பத்தினர் பத்திரத்தில் கையெழுத்திட்டு வசித்து வருகிறோம்.
அடிப்படை வசதி இல்லை
குடிநீர் தட்டுப்பாடு, குண்டும் குழியுமான சாலை என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. ரேஷன்கார்டு பழைய முகவரியில் உள்ளதால் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உரிய எந்தவொரு அடிப்படை வசதியும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
தற்போது கொரோனா காலத்திற்கு பின்னர் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கூலி வேலை செய்யும் நாங்கள் அனைவரும் மாத கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே முதல்-அமைச்சர் முறையான வாழ்வாதாரம் இல்லாத எங்களின் நிலையை உணர்ந்து வீட்டுக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.