விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்


விழுப்புரம் மாவட்டத்தில்    அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி    கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தி செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டத்துறை அலுவலர்கள் மூலம் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தகுதியானர்கள்

அதனடிப்படையில் தகரம் மற்றும் மண்சுவர் உள்ள வீடுகள், தென்னங்கீற்று, பனை ஓலை, இதர வகை ஓலைகள் கொண்டு கூரை வேயப்பட்ட வீடுகள், குடிசை வீடுகள், சிமெண்ட் அட்டை, ஆஸ்பெட்டாஸ், தகரம் போட்ட வீடுகள், சேதமடைந்த, சிதிலடைந்த வீடுகள் அல்லது வாழத்தகுதியற்ற, நிலைத்தன்மையற்ற வீடுகள், இலவச வீட்டுமனைப்பட்டா பெற்று வீடு கட்ட இயலாத குடும்பத்தை சேர்ந்தவர்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குடிசைகள், இயற்கை பேரிடர் அல்லது தீ விபத்துகளால் வீட்டை இழந்து தற்போது குடிசை வீடு அல்லது வாழத்தகுதியற்ற வீடுகள், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், இலவச வீட்டுமனைப்பெற்றும் ஊரக பகுதிகளில் வீடு கட்ட முடியாமல் இருக்கும் குடும்பங்கள், அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைப்பிரிவுகளில் வசிப்பவர்கள், பல்வேறு இயற்கை சூழ்நிலையினால் பாதிப்படைந்த வீடுகள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டத்தின் கீழ் வீடு பெறாதவர்கள் போன்ற குடும்பத்தினர்களை தகுதியானவர்களாக சேர்க்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

6-ந்தேதி வரை

இக்கணக்கெடுக்கும் பணி, அனைத்து கிராம ஊராட்சிகளில் வருகிற 6-ந் தேதி வரை குழுவின் மூலம் நடைபெறவுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் 13-ந் தேதிக்குள் மேலாய்வு செய்யப்படும். அதனை தொடர்ந்து பயனாளிகளின் விவரம் 14.1.2023 முதல் 20.1.2023-க்குள் கணக்கெடுப்பு பட்டியல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 23.1.2023-க்குள் தொகுக்கப்பட்ட புதிய கணக்கெடுப்பு பட்டியல் இறுதி செய்யப்பட்டு 24.1.2023, 25.1.2023 அன்று இறுதி செய்யப்பட்ட புதிய கணக்கெடுப்பு பட்டியலை கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அதன் தொடர்பாக கணக்கெடுப்பு பட்டியல் மீது 26.1.2023 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இப்பணி சிற்றூராட்சி, ஊராட்சி அளவில் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. தகுதியான பயனாளிகள் விடுபடாமல், அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி பொதுமக்களுக்கும் கொண்டு சேர்க்க அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story