தேனி, போடியில்2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
தேனி, போடியில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பேக்கரி ஊழியர் வீட்டில் திருட்டு
தேனி பங்களாமேடு 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர், கும்பகோணம் அருகே குடைவாசலில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 9-ந்தேதி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக தேனிக்கு வந்தார். பின்னர் கடந்த 11-ந்தேதி குடும்பத்துடன் கும்பகோணம் சென்று விட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருடைய மனைவி, மகள் இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் வெளிப்புற கேட் பூட்டி இருந்தது.
வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 2 பீரோக்கள் உடைந்த நிலையில் கிடந்தன. இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பீரோவுக்குள் வைத்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.36 ஆயிரம் ஆகியவை திருடுபோயிருந்தன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போடி அருகே உள்ள டாப் ஸ்டேஷன் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டியன் (52). இவர், அதே பகுதியில் துரித உணவு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி பூச்சுந்தரி. கடந்த 14-ந்தேதி கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். பின்னர் அன்றைய தினம் மாலையில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம், 2 பவுன் நகை ஆகியவை திருடுபோய் இருந்தது. இதுகுறித்து செபாஸ்டியன் குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செபாஸ்டியன் வீட்டிற்குள் புகுந்து திருடியது பக்கத்து வீட்டை சேர்ந்த கார் டிரைவரான பாண்டி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.