மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு


மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த மூத்த வாக்காளர்களுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த மூத்த வாக்காளர்களுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

தேசிய வாக்காளர் தினம்

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தினவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 5.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. நீலகிரியை பொருத்தவரை வயதில் மூத்த பழங்குடியின மக்கள் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் ஓட்டு போடுகின்றனர் அதேபோல் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களும் அனைத்து தேர்தலிலும் ஓட்டு போட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

இதைத்தொடர்ந்து பொம்மராயன், லிங்கி உள்பட தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும் பழங்குடியின மூத்த வாக்காளர்கள் 10 பேருக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பிராபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி,மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மலர்விழி, தேர்தல் தாசில்தார் புஷ்பாதேவி உள்பட கலந்துகொண்டனர்.


Next Story