ஆவடி அருகே பயங்கரம்: மனைவி கண் முன்னே கள்ளக்காதலன் வெட்டிக்கொலை


ஆவடி அருகே பயங்கரம்: மனைவி கண் முன்னே கள்ளக்காதலன் வெட்டிக்கொலை
x

ஆவடி அருகே வீடு புகுந்து மனைவி கண் முன்னே கள்ளக்காதலன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய கணவன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பொத்தூர் செல்வ கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 29). கார் டிரைவரான இவருக்கும், திருமழிசை பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி(25) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

விஜயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சத்யாவை(40) பிரிந்து 7 வயது மகனுடன் 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாக தெரிகிறது.

இதற்கிடையில்தான் விஜயலட்சுமிக்கும், சுரேஷ்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 3 மாதங்களாக கணவன்-மனைவி போல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் மனைவியின் கள்ளக்காதலை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத சத்யா, தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வரும் கள்ளக்காதலன் சுரேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை சத்யா தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து, அரிவாளுடன் சுரேஷ்குமார்-விஜயலட்சுமி வசித்து வரும் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தார்.

வீட்டில் இருந்த சுரேஷ்குமாரை கண்ணிமைக்கும் நேரத்தில் 4 பேரும் சேர்ந்து மனைவியின் கண் எதிரேயே அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது.

தனது கள்ளக்காதலன் வெட்டப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, அதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் இடது கை மோதிர விரலில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் அன்பழகன் மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் படுகாயமடைந்த விஜயலட்சுமியை மீட்டு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் கொலையான சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியின் கணவர் சத்யா உள்பட 4 பேரையும் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story