மேப்பூதகுடி கிராமத்தில் குதிரை எடுப்பு திருவிழா


மேப்பூதகுடி கிராமத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

குதிரை எடுப்பு திருவிழா

விராலிமலை தாலுகா மேப்பூதகுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார், பாப்பாத்தி, ஊராளி தொட்டியான், கன்னிமார், கள்ளிக்கருப்பு கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொதுமக்கள் வேண்டுதல் வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் இக்கோவிலில் குதிரை செய்து வைப்பது வழக்கம். இந்தநிலையில் இங்கு கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை எடுப்பு திருவிழாவானது நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மேப்பூதகுடி வேட்டைக்காட்டு மாரியம்மன் கோவிலில் களிமண்ணாலான குதிரை சிலைகளை செய்து வந்தனர். இந்தநிலையில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை குளக்கரை அருகே உள்ள சூளைமேட்டில் வைத்து குதிரைகளுக்கு நேற்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட குதிரைகளை தோளில் சுமந்து வந்து அய்யனார், பாப்பாத்தி, ஊராளி தொட்டியான், கன்னிமார், கள்ளிக்கருப்பு கருப்பசாமி கோவிலில் வைத்து வழிபட்டனர். இங்கு 33 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றதால் மேப்பூதகுடி பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.

சந்தன காப்பு அலங்காரம்

திருமயம் அருகே உள்ள வி.கோட்டையூரில் பூங்காவன அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கடந்த வாரம் பிடி மண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குதிரை பொம்மைகள் தயாரிக்கப்பட்டன. அதன்பின்னர் குதிரை எடுப்பு நிகழ்ச்சிக்காக குதிரை வர்ணம் பூசப்பட்டு நேற்று முன்தினம் பிறந்த ஊராக கருதப்படும் கே.கோட்டையூரில் இருந்து குதிரை பொட்டளை வந்தடைந்தது. அங்கு அய்யனாருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

விழாவை தொடர்ந்து நேற்று குதிரை எடுப்பு நிகழ்ச்சிக்காக குதிரைகள் மலர் மற்றும் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் குதிரைகளை பொட்டலில் இருந்து கோட்டையூர் கண்மாய் வழியாக தோளில் சுமந்து மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் வி.கோட்டையூரில் உள்ள பூங்காவன அய்யனார் கோவில் வளாகத்தில் குதிரைகள் இறக்கி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கூத்த பெருமாள் அய்யனார்

ஆவுடையார் கோவில் அருகே உள்ள நரியனேந்தல் கிராமத்தில் உள்ள கூத்த பெருமாள் அய்யனார், மகாலிங்க முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையடுத்து, பில்லு வலசை கிராமத்தில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட குதிரை சிலைகளை பூஜை செய்து பக்தர்கள் தோளில் சுமந்தவாறு தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர்.


Next Story