அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா
அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அருகே வெளூவூர் பூரண புஷ்கலா சமேத குன்னமுடைய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மண்ணிலால் செய்யப்பட்ட குதிரைகளை மேளதாளம் முழங்க பக்தர்கள் தோளில் சுமந்து அய்யனார் கோவில் முன்பு இறக்கி வைத்தனர். பின்னர் அய்யனாரையும், காளியம்மனையும் தரிசித்து சென்றனர்.
காரையூர் அருகே உள்ள வையாபுரியில் பாலகிரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் அடைக்கலங்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.
திருவரங்குளம் நந்தவனம் அருகே உள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலை சேர்ந்த ஏழுமுக காளியம்மனுக்கு 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி ரைஸ் மில் சரளை பள்ளம் அதிர்ஷ்ட ஆஞ்சநேயருக்கு 16 வகையான திரவியங்களால் நேற்று அபிஷேகம் நடைபெற்றது.