போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகள்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 4:04 PM IST)
t-max-icont-min-icon

லெட்சுமாங்குடி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

லெட்சுமாங்குடி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய வழித்தடம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடி பிரதான சாலை திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாகூர், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை போன்ற முக்கியமான ஊர்களை இணைக்கும் வழித்தடம்.

இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் என தினமும் 100-க்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் முன்பு அடிக்கடி மாடுகள் சுற்றி வந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. ஆனால், சமீப காலங்களில் அதிகளவில் மாடுகள் சுற்றி திரிவது குறைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சற்றே மகிழ்ச்சி அடைந்தனர்.

விபத்து ஏற்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாடுகளுக்கு பதிலாக லெட்சுமாங்குடி சாலையில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. லெட்சுமாங்குடி புதிய பஸ் நிலையம் தொடங்கி, பனங்காட்டாங்குடி வரையிலும், சுமார் 5 கி.மீட்டர் தூரத்திற்கு இந்த குதிரைகள் கூட்டமாக சென்று சாலையில் ஒன்று கூடி நிற்பதும், படுத்து உறங்குவதும், சாலையில் ஒன்றுக்கொன்று துள்ளிக் குதித்து விளையாடுவதும், ஓடுவதுமாக இருந்து வருகிறது. இதனால், சாலையில் குதிரைகள் நிற்பதை கண்டதுமே வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.சமயத்தில் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. குதிரைகள் சாலையின் நடு மையத்தில் நிற்கும் போது, எதிர் எதிரே வரும் வாகனங்கள் எந்த பாதையில் ஓட்டிச்செல்வது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர்.இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு பலர் பலத்த காயம் அடைந்து உள்ளனர். எனவே, பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன்னர் சாலையில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story