மருத்துவ கருவிகள் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
மருத்துவ கருவிகள் இல்லாத
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வெள்ளகோவில் அரசு ஆரம்ப சமுதாய சுகாதார நிலையம் 1960-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதி உள்ளது. சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி போன்ற மருத்துவ பிரிவுகள் உள்ளன, தாய் சேய் நல சிகிச்சை மையம் உள்ளது, ஆய்வகம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை, காசநோய் பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இசிஜி, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் வசதிகள் உள்ளன. இந்த சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் உதவி மருத்துவர்கள் என 6 மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆய்வக நுட்புணர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என 30 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு சராசரியாக 200 முதல் 300 நோயாளிகள் தினசரி வந்து செல்கின்றனர். நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால் காங்கயம் அல்லது திருப்பூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வெள்ளகோவில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும், இங்கு 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், ஆயில் மில்கள், விசைத்தறிக்கூடங்கள், அரிசி ஆலைகள் என உள்ளன. இந்த ஆலைகளில் வட மாநில பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். வெள்ளகோவில் பகுதி தொழிலாளர்கள் இந்த சமுதாய சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனர். ஆகையால் உடனே சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு எக்ஸ்ரே வசதி செய்து கொடுக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்துள்ளனர்.