விபத்துக்கு அவசர சிகிச்சை அளிக்கபாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படுமா?உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நல்லம்பள்ளி:
பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்துகளில் சிக்கியோருக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் காயம்
இந்தியாவின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தர்மபுரி-சேலத்துக்கு இடைப்பட்ட தொப்பூர் கணவாய் பகுதி வழியாக தினமும் சுமார் 50 ஆயிரம் வாகனங்கள் சென்று, வருகின்றன. அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது. விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள் சிலர் கை, கால் உள்ளிட்ட தங்களது உறுப்புகளை இழந்து தவிக்கின்றனர். கடந்த 11 ஆண்டுகளில் இந்த பகுதியில் நடைபெற்ற விபத்துகளில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உடல் ஊனமுற்றல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தொப்பூர் கணவாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விபத்தில் சிக்கியவர்களை சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் போது ஏற்படும் காலதாமதத்தால் உடனடி சிகிச்சை தேவைப்படுவோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
அவசர சிகிச்சை
இதற்கு தீர்வு காண தொப்பூர் பகுதியில் பாளையம்புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் உயிர்காக்கும் அவசர சிகிச்சை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவு, ஸ்கேன் வசதி, சித்த மருத்துவ பிரிவு ஆகியவை உள்ளன. அங்கு 2 டாக்டர்கள், 3 நர்சுகள் பணிபுரிகிறார்கள்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இங்கு டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் இங்கு டாக்டர்கள் இருப்பதில்லை. இதனால் விபத்தில் காயமடைபவர்களுக்கு இங்கே உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காண இங்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அவசர சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
தரம் உயர்த்த வேண்டும்
வெள்ளக்கல்லை சேர்ந்த மாரி:-
தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய்க்கும், பாளையம்புதூருக்கும் இடைப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. விபத்து நடந்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுவதால் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. விபத்தில் சிக்குபவர்களை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகிறது. இந்த காலதாமதத்தால் பல நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பாளையம்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், விபத்து அவசர சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான கூடுதல் வசதிகளை இங்கு ஏற்படுத்தி விபத்து அவசர சிகிச்சை சிறப்பு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்.
24 மணி நேரமும் சிகிச்சை
பாளையம்புதூரை சேர்ந்த லட்சுமி:-
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் மருத்துவ சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். பிற்பகல் நேரத்திற்கு பிறகு இங்கு டாக்டர்கள் இருப்பதில்லை. இதனால் பிரசவம், விஷக்கடி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் இங்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வசதி
தாதநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்:-
பாளையம்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10 கி.மீ. சுற்றளவில் மலை கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றை சேர்ந்தவர்கள் அவசர சிகிச்சைகளை பெற இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி உள்ளனர். இங்கு உரிய சிகிச்சை கிடைக்காவிட்டால் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பிரசவ கால அவசர சிகிச்சை தேவைப்படுவோர் அத்தகைய நேரங்களில் ஏற்படும் காலதாமதத்தால் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இதேபோல் சாதாரண மக்கள் தங்கள் பொருளாதார சூழலால் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்சுகளை பயன்படுத்த முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு பாளையம்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து, விஷக்கடி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு அனைத்து விதமான அவசர சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தரம் உயர்த்த வேண்டும். இங்கு 2 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்குமா?
தொப்பூர் கணவாயில் விபத்துகளை தடுக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், விபத்தில் சிக்கியோர், உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பதை தடுக்க பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.