ஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்:வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்-சிகிச்சை, உணவுமுறை குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து


ஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்:வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக ஆஸ்பத்திரியில் நோயாளிகள் குவிந்து வருகிறார்கள். இருப்பினும் காய்ச்சலுக்கான சிகிச்சை, உணவுமுறை குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

காய்ச்சல்

புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது. உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது. இதனால்தான் வீடுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கு பீதி ஏற்படுகிறது.

காய்ச்சல் ஒரு சுவாச தொற்று நோய். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் 'இன்புளூயன்ஸா' என்ற வகை வைரசால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல் குறிப்பாக இரவில் அதிகரிக்கும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட வரலாம் என்கின்றனர். சென்னையை பொறுத்த வரையில் கடந்த 60 நாட்களாக வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது. இது பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நிலைகளையும், இந்த வகை காய்ச்சல் மோசமாக்கிவிடுவதால் பொதுமக்களால் அஞ்சப்படுகிறது. பொதுவாக, உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி பாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்சினையில்லை. அதை தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமாக காய்ச்சல் காலம் செப்டம்பரில் தொடங்கி நவம்பரில் உச்சத்தை எட்டும். டிசம்பர்- ஜனவரிக்கு பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக குறையும். இந்த ஆண்டு காய்ச்சல் சீசன் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து தொற்று பரவுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், எச்1என்1 பாதிப்பு காணப்பட்டது. வாரங்கள் பல கடந்த நிலையில், எச்3என்2 மற்றும் 'இன்புளூயன்சா' பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காண முடிகிறது. இப்போது, ரைனோவைரஸ் மற்றும் ஆர்.எஸ்.வி. (சுவாச ஒத்திசைவு வைரஸ்) போன்ற வைரஸ்களின் கலவையும் பரவுகிறது. இதனால் சராசரியாக தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நோயாளிகளையும், அவசரநிலையில் 10 நோயாளிகளும் வருகின்றனர்' என்று தொற்று நோய் ஆலோசகர்களும் கூறுகின்றனர். வைரஸ் காய்ச்சல் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதுதொடர்பாக வைரஸ் காய்ச்சல் சிகிச்சை, உணவுமுறை குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் விவரம் வருமாறு:-

பெரிய பாதிப்பு ஏற்படாது

சேலம் அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் குமரவேல்:-

காய்ச்சலுடன் சேர்ந்து உடல் வலி, தொண்டை வலி, கண் எரிச்சல், இருமலும் காணப்படுகிறது. மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும்போது காய்ச்சல் வரும். ஆனால், இப்போது வரும் காய்ச்சல் அதுபோல் இல்லை. கொரோனா பரவியது போல் காற்று மூலமாகத்தான் பரவுகிறது. இதனால் அனைவரும் கொரோனா காலத்தில் கடைபிடித்த முககவசம் அணிதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா வழிகாட்டு முறைகளை தற்போது கடைபிடிக்க வேண்டும்.

இந்த காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியம் எதையும் நாங்கள் பரிந்துரை செய்வது கிடையாது. காய்ச்சல் வந்தவுடன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குதான் அதிக அளவில் காய்ச்சல் வருகிறது. காய்ச்சலுடன் குழந்தைகளுக்கு இருமல்தான் அதிகம் இருக்கிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ, சாப்பிடுவதை தவிர்த்தாலோ, உடல் சோர்வாக இருந்தாலோ உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துவர வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் கொடுக்கும் மருந்தை கொடுத்தாலே போதும் 3 முதல் 5 நாட்களில் இந்த காய்ச்சல் சரியாகிவிடும். 3 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். உயிரிழப்பு போன்ற பெரிய பாதிப்பு ஏற்படாது.

வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது

ஓமலூர் அரசு மருத்துவமனை டாக்டர் பெருமாள் சின்னசாமி:-

மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும்போது காய்ச்சல் வரும். ஆனால், இப்போது வரும் காய்ச்சல் அதுபோல் இல்லை. குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததே இதுபோன்ற காய்ச்சல் பரவும் விகிதம் அதிகம் ஆனதற்கும் காரணமாகும். தமிழகத்தில் சமீப காலமாக எக்ஸ்.3 என்.2 'இன்புளூயன்ஸா' எனப்படும் வைரஸ் கிருமி தொற்று அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் ஆனது நோயாளிகள் சளி வழியாக தும்பும் போதும், இருமல் போதும் காற்றில் பறந்து மற்றவர்களை தொற்றுகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 அல்லது 3 நாட்கள் சளி, உடல் சோர்வு, தலைவலி, தொண்டை கரகரப்பு, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முககவசம் அணிய வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு போட்டு அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். புரோட்டின் மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ, சாப்பிடுவதை தவிர்த்தாலோ, உடல் சோர்வாக இருந்தாலோ உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துவர வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் கொடுக்கும் மருந்தை கொடுத்தாலே போதும் 3 முதல் 5 நாட்களில் இந்த காய்ச்சல் சரியாகிவிடும்.

உரிய நடவடிக்கை

தலைவாசல் காட்டுக்கோட்டையை சேர்ந்த பழனிவேல்:-

தலைவாசல் பகுதிகளில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வயதான முதியவர்களையும் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் விட்டுவைக்கவில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. காய்கறி, பழங்கள், கீரை போன்றவற்றை நன்றாக கழுவியே உபயோகிக்க வேண்டும். என்னதான் உயர் ரக குடிநீர் சுத்திகரிப்பான் எந்திரம் இருந்தாலும், கொதிக்க வைத்த தண்ணீர்தான் 100 சதவீதம் பாதுகாப்பானது. கிராமப்புறங்களில் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். இந்த வகை காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசு தொல்லையால் அவதி

அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த அருண்குமார்:-

பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும். வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் தினமும் உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும். வயதானவர்கள் நீர்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது நல்லது. பாஸ்ட் புட் எனும் துரித உணவு பழக்கத்தை குறைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க தேவையான சத்தாண உணவுகளை உட்கொள்ள வேண்டும். தற்போது வீடுகளில் மாலை 6 மணிக்கு மேல் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

தேவூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிதா:-

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் என்பது கிட்டத்தட்ட கொரோனா நோய் போன்றது தான். காலநிலை மாற்றமா? சுற்றுப்புறச்சூழல் கேடு? கொசு தொல்லையா? இவற்றில் எதனால் இந்த காய்ச்சல் வருகிறது? என்று தெரியவில்லை. நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு முககவசம் இல்லாமல் செல்லக்கூடாது. எளிதில் சளி பிடிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். எனவே வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 பேர் பலி

நாடு முழுவதும் 'எச்3 என்2' வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலுக்கு அரியானாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி உள்ளது. இதற்கிடையே வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்டத்தில் 260 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களுக்கு உட்பட்ட 20 வட்டாரங்களிலும் நேற்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஒவ்வொரு வட்டார எல்லை அடிப்படையில் 3 முதல் 6 குழுக்கள் வரை என சுமார் 260 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. முகாமில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர், ஒரு உதவியாளர் என 260 இடங்களில் மொத்தம் சுமார் 700-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அரசு ஆஸ்பத்திரிகளிலும், பஸ் நிலையம், ரெயில் நிலையம், வாரச்சந்தை என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல பிரிவு தலைவர் டாக்டர் குமரவேல் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.


Next Story