ஓசூரில்தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிஇன்று நடக்கிறது


ஓசூரில்தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிஇன்று நடக்கிறது
x
தினத்தந்தி 17 March 2023 12:30 AM IST (Updated: 17 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ஓசூரில் இன்று தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:- உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து புரிதலையும் வளரும் தலைமுறையினர் முழுமையாக தெரிந்துக்கொள்ளும் வகையில் பண்பாட்டின் முக்கியக் கூறுகளான கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமையாகும்.

சொற்பொழிவாளர்கள்

இதன் மூலம் அவர்கள் உணர்ந்ததை அடுத்து வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வு உள்ள சமூகம் உருவாக்க முடியும். பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கும், குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகத்தின் கட்டமைப்பின் முக்கியமான பங்காகும்.

இதற்கான சொற்பொழி நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் சொற்பொழிவாளர்கள் ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் சமஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி அரங்குகள்

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, திறன் மேம்பாட்டுத் துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், முன்னோடி வங்கி, தாட்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குள் அமைக்கப்பட உள்ளன.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதிவயாளர் சங்கர்ராஜ், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story