ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது32 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
ஓசூர்:
ஓசூர் சிப்காட் மற்றும் கர்நாடக மாநில பகுதியில் கடந்த 3 மாதங்களாக தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழிப்பறி செய்த சம்பவம் நடந்து வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணி மேற்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன், அபு, பரத், தனுஷ், கிரண்குமார் தினேஷ், ஆகாஷ்ராஜூ, கணேஷ் மற்றும் சக்திகுமார் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 32 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.