150 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்க தடை: கனவாகி போன ஓசூர் விமான நிலைய திட்டம்-பொதுமக்கள் வேதனை


150 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்க தடை: கனவாகி போன ஓசூர் விமான நிலைய திட்டம்-பொதுமக்கள் வேதனை
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் சுற்றளவில் வேறு விமான நிலையங்கள் அமைக்க கூடாது என்ற ஒப்பந்ததின் அடிப்படையில் ஓசூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை வேதனைக்குள்ளாகி உள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் நகரம் என்று அழைக்கப்படும் ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில், தமிழக-கர்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து, விமானம் தயாரிக்க கூடிய தொழிற்சாலை வரை ஓசூரில் உள்ளன.

சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஓசூரில், வட மாநிலத்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் வசித்து வருகிறார்கள். அதே போல தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களும் ஓசூரில் தொழில் நிமித்தமாக உள்ளார்கள். இத்தகைய ஓசூரில் ரோஜா உள்ளிட்ட மலர்கள் சாகுபடி பிரதான தொழிலாக உள்ளன.

அதேபோல இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் தயாரிக்க கூடிய முன்னணி நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளன. இங்குள்ள வெளிமாநில மக்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். மேலும் பெங்களூரு சென்று விமான சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதே போல ஓசூரில் இருந்து மலர்களும், பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மாநகராட்சி அந்தஸ்து பெற்ற ஓசூர் நகரின் அதிவேக வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி இவற்றை கருத்தில் கொண்டு இங்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஏற்கனவே ஓசூரில் தளி சாலையில் பேளகொண்டப்பள்ளியில் தனியார் விமானம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு விமான ஓடுதளம் உள்ளதால் ஓசூரில் இருந்து மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிப்புகள் முன்பு வெளியானது. இது ஓசூர் பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் அறிவிப்பு வந்து நீண்ட நாட்கள் ஆகியும் கிணற்றில் போட்ட கல்லை போல இந்த திட்டம் பற்றி அடுத்த கட்ட அறிவிப்புகள் எதுவும் வெளி வரவில்லை. இதனால் ஓசூர் விமான நிலைய திட்டம் வருமா?, ஓசூரில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு விமானங்கள் பறக்குமா? என்ற கவலை மக்களிடையே ஏற்பட்டது.

இந்தநிலையில் ஓசூர் விமான நிலைய திட்ட அறிவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிவிப்பு வெளியானது. தி.மு.க. எம்.பி. வில்சன் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் பதில் அளித்தார்.

அதில் 2033-க்கு முன்பு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு புதிய விமான நிலையங்கள் அமைக்கவும், மேம்படுத்தவும் கூடாது என்று ஒப்பந்தம் உள்ளது. இதனால் ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில் மைசூரு, ஹசன் விமான நிலையங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு ஓசூர் பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 150 கிலோ மீட்டர் என்றால் அது மைசூரு, ஹசனுக்கும் தான் பொருந்தும், ஓசூருக்கு மட்டுமா இந்த அறிவிப்பு பொருந்தும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தர்மபுரியை சேர்ந்த தொழில் அதிபர் டி.என்.சி.இளங்கோவன்:-

ஓசூரில் விமான நிலையம் அமைந்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர், பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள். இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரு மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தை எளிதில் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் காலதாமதத்தால் ஏராளமானவர்கள் விமானங்களை தவற விட்டுள்ளனர். எனவே பெங்களூருவில் விமான நிலையம் இருப்பதை காரணம் காட்டி, ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கூடாது. தமிழகத்திற்கு சாதகமான அம்சங்கள் கொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தர்மபுரியை சேர்ந்த நிதி மேலாண்மை ஆலோசகர் ஸ்ரீகாந்த்:-

நான் சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு விமான பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஓசூரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் பெங்களூரு விமான நிலையம் இருந்தாலும் அதிக வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓசூர் பகுதியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தை சென்றடைய 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.

இதனால் ஏற்படும் காலதாமதத்தால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதில் தூரம் தொடர்பான விதியை பார்க்காமல் தமிழகம் வேறு மாநிலம் என்பதை கருத்தில் கொண்டு ஓசூரில் விமான நிலையம் அமைக்க வாய்ப்பு உள்ளதா? என ஆலோசிக்க வேண்டும். ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர், வணிகர்கள் பயனடைவார்கள். பெரிய தொழில் முதலீடுகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தர்மபுரியை சேர்ந்த கார்மெண்ட் ஏற்றுமதியாளர் சந்தோஷ் சிவா:-

தர்மபுரி மாவட்டத்தில் இப்போதுதான் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓசூரில் புதிய விமான நிலையம் அமைந்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோரின் முதலீடுகள் அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்திற்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமாநிலங்களில் உள்ள கோவில்கள், புனித தலங்களுக்கு விமானம் மூலம் சென்று வருகிறார்கள். ஓசூரில் விமான நிலையம் அமைந்தால் பக்தர்கள் பயன்பெறுவார்கள். தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஓசூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை கைவிடும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

ஓசூரை சேர்ந்த தொழில் அதிபர் சுதா நாகராஜன்:-

தொழில் நகரமாக விளங்கும் ஓசூரில் விமான போக்குவரத்து என்பது அவசியமான ஒன்றாகும். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பலரும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்ல சென்னை அல்லது பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஓசூரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல நீண்ட நேரமாகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக அந்த சாலை உள்ளது. ஓசூரில் விமான சேவை தொடங்கும் பட்சத்தில், தொழில் முனைவோர்கள் அதிகமாக பயன் அடைவார்கள். இந்த பகுதியில் மேலும் தொழில் நிறுவனங்களை அமைக்க பலரும் முன் வருவார்கள். எனவே ஓசூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி நிரஞ்சன்:-

ஓசூரில் விமான சேவை தொடங்க போகிறது என்று முதலில் தகவல் வந்த போது என்னை போன்ற பலரும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் தற்போது 150 கிலோ மீட்டர் தூரத்தில் விமான நிலையம் அமைக்க கூடாது என உத்தரவு இருப்பதாகவும், அதனால் ஓசூரில் விமான நிலையம் வர வாய்ப்பு இல்லை என கூறுவது ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மைசூர், ஹசன் விமான நிலையங்களுக்கு எவ்வளவு தூரம் உள்ளது. ஓசூர் தமிழகம், பெங்களூரு கர்நாடகா வெவ்வேறு மாநிலம் என்பதை வைத்து, ஓசூரில் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story