ஓசூர் காலிபிளவர் விலை கடும் உயர்வு
ஓசூர் காலிபிளவர் விலை கடும் உயர்வு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாள்தோறும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் வந்து விற்பனையாகி வருகின்றன. இதுதவிர ராமநாதபுரத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் சந்தை அன்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட காய்கறிகள் கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற சந்தையின்போது காய்கறிகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அதன் விற்பனை குறைவாக இருந்தது. இதுதவிர மற்ற காய்கறிகள் விற்பனை பரவலாக நடைபெற்றது. நேற்று ராமநாதபுரம் சந்தையில் ஓசூர் பகுதியில் இருந்து சரக்கு வாகனங்களில் ஏராளமான காலிபிளவர்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. சிறிய பூ ரூ.30 வரையும், பெரிய பூ ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ரூ.10 என விற்பனை செய்யப்பட்ட காலிபிளவர் நேற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது பொதுமக்களை அதிர்ச்சி அடையச்செய்தது. இதுகுறித்து காலிபிளவர் விற்ற அல்லாபிச்சை கூறும்போது, காலிபிளவர் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். அந்த பகுதிகளில் அதிக மழை பெய்ததன் காரணமாக பூக்களை பறிக்க முடியாமல் அழுகிவிட்டது. இதன்காரணமாக காலிபிளவர்களின் வரத்து குறைந்துவிட்டது. இதனால் கடந்த மாதம் ரூ.10-க்கு விற்பனையான காலிபிளவர் தற்போது ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அடுத்த பருவத்திற்கான விதைப்பு முடிவடைந்துள்ளதால் வரும் நாட்களில் காலிபிளவரின் விலை மீண்டும் குறையும் வாய்ப்பு உள்ளது என்றார்.