ஈரோட்டில் வாட்டி வதைக்கும் வெயிலால் வெறிச்சோடிய சாலைகள்


ஈரோட்டில் வாட்டி வதைக்கும் வெயிலால் வெறிச்சோடிய சாலைகள்
x

ஈரோட்டில் வாட்டி வதைக்கும் வெயிலால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோடு

ஈரோட்டில் வாட்டி வதைக்கும் வெயிலால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நெருப்பாக சுடும் வெயில்

ஈரோடு மாவட்டத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நெருப்பாக சுட்டு வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே வெயில் அளவு 100 டிகிரி பாரன்கீட் அளவுக்கு பதிவாகி மிரட்ட தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்தாலும் ஈரோட்டில் மட்டும் ஒரு துளி கூட மழை விழாமல் வானம் வறண்டுபோய் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. ஓரிரு நாட்கள் மட்டுமே அக்னி வெயில் கொளுத்திய நிலையில், வானம் ஈரோடு மக்களின் மீது கருணை கூர்ந்ததுபோல, மழையை பொழிந்தது. இதனால் மண்ணும் மனமும் குளிர்ந்தது.

மழை பொழியுமா?

ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. கடந்த 3 நாட்களாக ஈரோட்டில் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 100 டிகிரி பாரன்கீட் வெப்பத்தையே தாங்க முடியாத நிலையில் நேற்று அதிக பட்சமாக 105.08 டிகிரி வெப்பம் கொளுத்தியது. சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு அனல் வாட்டியது. வெந்நீர் ஊற்றியதுபோல அனல் காற்று வீசியது. ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடின.

மேலும் பொதுமக்கள் பலரும் தண்ணீர் தாகத்தை தீர்க்க குளிர்பான கடைகளில் நேற்று குவிந்தனர். நுங்கு, இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு கடைகளிலும் சர்பத், சோடா மற்றும் பழச்சாறு கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.

இரவிலும் வெப்பக்காற்று வீசியதால் வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். கத்திரி வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மழை பொழியுமா? என்று மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.


Next Story