திரண்டு வந்து நாகை நகர மக்களை 'வஞ்சிக்கும்' மழை மேகங்கள்
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் திரண்டு வந்து நாகை நகர மக்களை மழை மேகங்கள் வஞ்சித்து வருகின்றன.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் திரண்டு வந்து நாகை நகர மக்களை மழை மேகங்கள் வஞ்சித்து வருகின்றன.
வாட்டி வதைக்கும் வெயில்
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நாகையில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திர காலங்களில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் மிதமாக வெயில் அடிக்க வேண்டிய இந்த நேரத்தில் அக்னி நட்சத்திர காலத்தைப்போல் வெயில் சுட்டெரித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. இரவில் மின்விசிறியில் இருந்து வரும் காற்று அனலாக கொதிக்கிறது.
மழையை எதிர்பார்க்கும் மக்கள்
வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஒரே வழி மழை என்பதால், மழை பெய்ய வேண்டும் என்று நாகை நகர பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகை அருகே உள்ள காரைக்காலில் மழை கொட்டித்தீர்த்தது.
நாகை மாவட்டம் சிக்கல், வாய்மேடு, தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் நாகை நகரில் மட்டும் மழை பெய்யவில்லை.
வஞ்சித்த மேகங்கள்
நாகையை சுற்றி உள்ள இடங்களில் மழை பெய்யும் அதே நேரத்தில் நாகை நகரில் கடந்த 3 நாட்களாக கருமேகங்கள் திரண்டு வருவதும், மழை பெய்யாமல் மேகங்கள் கலைந்து செல்வதுமாக உள்ளது. வெயிலின் தாக்கமும் குறையவில்லை.
மழை பெய்வது போல திரண்டு வரும் கருமேகங்கள் தங்களை வஞ்சித்து வருவதாக நாகை நகர மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.