சூடு பிடிக்கும் தர்ப்பூசணி பழ விற்பனை


சூடு பிடிக்கும் தர்ப்பூசணி பழ விற்பனை
x

திண்டுக்கல்லில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தர்ப்பூசணி பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

திண்டுக்கல்

சுட்டெரிக்கும் வெயில்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பான கடைகளையும், பழங்கள், பழச்சாறு விற்பனை கடைகளையும் பொதுமக்கள் நாடி செல்கின்றனர்.

இதன் காரணமாக பழங்கள், குளிர்பானங்கள் அமோகமாக விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக தர்ப்பூசணி, கரும்புச்சாறு, இளநீர் விற்பனை திண்டுக்கல்லில் சூடு பிடித்து வருகிறது.

தர்ப்பூசணி பழங்களை பொறுத்த வரை கர்நாடக மாநிலம் மற்றும் திண்டிவனம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

திண்டிவனத்தில் இருந்து கொண்டு வரப்படும் தர்ப்பூசணி பழங்கள் அதிக சுவை கொண்டதாக இருப்பதால் அவற்றுக்கு தனி மவுசு உள்ளது.

தர்ப்பூசணி வரத்து குறைவு

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிற தர்ப்பூசணி பழங்கள் அவற்றின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தர்ப்பூசணி பழங்களுக்கான சீசன் வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை இருக்கும். ஆனால் தற்போது முன்கூட்டியே சீசன் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தர்ப்பூசணி பழங்கள் பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், இந்த ஆண்டு விவசாயிகள் குறைந்த பரப்பளவில் தர்ப்பூசணி பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். இதனால் மார்க்கெட்டுக்கு தர்ப்பூசணி வரத்து குறைந்தது.

கிலோ ரூ.25-க்கு விற்பனை

இதுகுறித்து தர்ப்பூசணி வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக சீசன் காலத்தில் ஒரு கிலோ தர்ப்பூசணி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகும். தற்போது உள்ளூர் தர்ப்பூசணி வரத்து குறைந்துள்ளதால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தர்ப்பூசணி பழங்கள் கொண்டு வரப்படுகிறது. இதனால் ஒரு கிலோ தர்ப்பூசணி ரூ.25 வரை விற்கப்படுகிறது. 300 கிராம் எடை கொண்ட ஒரு பீஸ் தர்ப்பூசணி பழம் ரூ.10-க்கு விற்பனை செய்கிறோம். தர்பூசணி பழங்களை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் மிளகாய் பொடி தூவி சுவையாக கொடுப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர் என்றனர்.


Next Story