பண்ருட்டி அருகே பயங்கரம்ஓட்டல் ஊழியர் அடித்துக் கொலைவிபத்தில் சிக்கியதாக நாடகமாடிய 2 நண்பர்கள் கைது
பண்ருட்டி அருகே ஓட்டல் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
ஓட்டல் ஊழியர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுமேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தனவேல் மகன் சிவக்கொழுந்து (வயது 34). இவர் காடாம்புலியூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சிவக்கொழுந்து கடந்த மாதம் 28-ந்தேதி வேலைக்கு சென்று விட்டு நண்பர்களான அதேஊரை சேர்ந்த கார்த்திகேயன் மகன் அபினேஷ் (21), ராஜ்மோகன் மகன் கார்மேகம் (20) ஆகியோருடன் காட்டாண்டிக்குப்பம் அய்யனார் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தார். அப்போது அவர் ஆட்டு இறைச்சி வறுவலை அதிகமாக எடுத்து சாப்பிட்டார்.
தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், கார்மேகம் ஆகிய 2 பேரும் சேர்ந்து சிவகொழுந்துவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சிவக்கொழுந்து மயங்கி கீழே சாய்ந்தார். சிவக்கொழுந்து இறந்து விட்டதாக கருதிய 2 பேரும் சிவக்கொழுந்துவை அவரது மோட்டார் சைக்கிளுடன் சாலையில் போட்டனர்.
பின்னர் அவர்கள் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று, அவருடைய குடும்பத்தினரிடம் சிவக்கொழுந்து மோட்டார் சைக்கிளில் தானாகவே கீழே விழுந்து படுகாயத்துடன் கிடப்பதாக கூறினர்.
உடலை வாங்க மறுப்பு
இதை கேட்டு பதறிய குடும்பத்தினர் விரைந்து சென்று பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த சிவக்கொழுந்துவை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சிவக்கொழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சிவக்கொழுந்துவின் பெற்றோர் தனது மகனின் சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை சிவக்கொழுந்து உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சிவக்கொழுந்துவுடன் மது அருந்திய அபினேஷ், கார்மேகம் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
நாடகமாடியது அம்பலம்
விசாரணையில் நண்பர்களான 3 பேரும் கடந்த 28-ந்தேதி மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அபினேஷ், கார்மேகம் ஆகிய 2 பேரும் சேர்ந்து சிவக்கொழுந்துவை தாக்கியுள்ளனர். இதில் மயங்கிய அவர், இறந்து விட்டதாக நினைத்து மோட்டார் சைக்கிளுடன் சாலையில் போட்டு விட்டு, விபத்தில் சிக்கியதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மது அருந்தும்போது ஆட்டிறைச்சி அதிகம் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து ஓட்டல் ஊழியரை அடித்துக் கொலை செய்து விட்டு, விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.