ஓட்டல் மேலாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை 3 கோவில்களிலும் உண்டியல் உடைப்பு


ஓட்டல் மேலாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை 3 கோவில்களிலும் உண்டியல் உடைப்பு
x

அரக்கோணம் அருகே ஓட்டல் மேலாளர் வீட்டில் 30 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள், 3 கோவில்களிலும் அம்மன் தாலி, உண்டியல் பணத்தையும் அள்ளிச்சென்றுள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே ஓட்டல் மேலாளர் வீட்டில் 30 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள், 3 கோவில்களிலும் அம்மன் தாலி, உண்டியல் பணத்தையும் அள்ளிச்சென்றுள்ளனர்.

ஓட்டல் மேலாளர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வாணியம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 58). சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு பிரசாந்த், பிரவீன் என இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் பிரசாந்த் பெங்களூருவில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். பிரவீன் பிசியோதெரபிஸ்டாக உள்ளார்.

பிரசாந்துக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரசாந்தை பெங்களூருவில் தனி குடித்தனம் வைப்பதற்காக பிரபாகரன் குடும்பத்தினருடன் கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு பெங்களூருவுக்கு சென்றுள்ளனர்.

நகை திருட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபாகரன் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பார்த்திபன் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3 கோவில்களிலும் கைவரிசை

இதே போன்று அரக்கோணத்தை அடுத்த இலுப்பைதண்டலம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் மற்றும் அம்மன் தாலி ஆகியவற்றையும், அதே பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றையும், அருகில் உள்ள வீர முனீஸ்வரர் கோவிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

ஒரே இரவில் வீடு மற்றும் அடுத்தடுத்து 3 கோவில்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் பகுதியில் நடந்த இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story