ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவட்டார் அருகே ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார் அருகே மேக்காமண்டபம் குமரன்குடிவிளை பகுதியை சேர்ந்தவர் அஜிஸ் (வயது 55). இவர் அழகியமண்டபம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், அப்சல் (29), அன்சில் (25) என 2 மகன்கள் உள்ளனர். இதில் அன்சிலுக்கு திருமணமாகிவிட்டது. அன்சில் அந்த பகுதியில் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக அஜிஸ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக அஜிஸ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அஜிஸின் படுக்கை அறைக்கதவு வெகு நேரமாக திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் அன்சில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு அஜிஸ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், இதுகுறித்து அன்சில் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.