சேலத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


சேலத்தில்  ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x

சேலத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்

தற்கொலை

சேலம் அஸ்தம்பட்டி கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் சின்னசீரகாபாடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி காயத்திரி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மணிகண்டனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இதனிடையே மணிகண்டன் தற்கொலைக்கு முன்பு, ஓட்டல் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் மணிகண்டன் உறவினர்கள் நேற்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், மணிகண்டனை தற்கொலைக்கு தூண்டிய ஓட்டல் உரிமையாளர் உள்பட சிலர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story