ஓட்டல் தொழிலாளி மர்ம சாவு


ஓட்டல் தொழிலாளி மர்ம சாவு
x

சாத்தனூர் அருகே ஓட்டல் தொழிலாளி உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

சாத்தனூர் அருகே ஓட்டல் தொழிலாளி உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓட்டல் தொழிலாளி

தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் கடப்பன்குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனி, ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி காலையில் அவரது வீட்டருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த சிலர், அவர் மீன் பிடிக்கதான் வந்து உள்ளார் என்று நினைத்து பழனியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சாத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை முறையாக கொலை வழக்காக மாற்றி பதிவு செய்திடக் கோரியும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பழனியின் உறவினர்கள் மற்றும் திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், சின்ராசு மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தால் தான் பழனியின் உடலை வாங்குவோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பழனியின் உடலை அவர்கள் வாங்காததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story